சென்னை: ‘சானிட்டரி நாப்கின்’ மற்றும் குழந்தைகளுக்கான ‘டயப்பர்’ ஆகியவற்றில், நச்சு ரசாயனங்களை பயன்படுத்த தடை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ‘டயப்பர்’கள், பெண்களுக்கான ‘சானிட்டரி நாப்கின்’களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை முழுமையாக வெளியிடுவதை கட்டாயமாக்கும் விதிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சுபத்ரா, பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள நச்சுக்கள், உடலுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், முற்றிலும் நச்சுத்தன்மையற்ற பொருட்களை, ‘சானிட்டரி பேட்’ களில் பயன்படுத்துவது அவசியம்.
டில்லியைச் சேர்ந்த டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய ஆய்வில், நாட்டில் விற்கப்படும் மிகவும் பிரபலமான சானிட்டரி நாப்கின்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, டயப்பர், சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்துவதை தடை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஜவுளித் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
