சென்னை: சிறந்த பண்பாளர் நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜூனா தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இதை ரஜினி ரசிகர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை;
திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமரின் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர்.
ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர். அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல. அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.
பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும்.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
