சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில், சமையல் காஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்து, 10 நாட்களுக்கு மேலாகியும், சிலிண்டர் வராததால், மக்கள் ஏஜன்சிகளை முற்றுகையிடுகின்றனர். இதனால், அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நடக்கும் போரால், நம் நாட்டிற்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டது. இதனால், வீடுகளுக்கு தடையின்றி காஸ் வினியோகம் செய்ய, கடந்த மார்ச் 9ம் தேதி முதல், ஹோட்டல், வணிகப் பிரிவுகளுக்கு, ‘சிலிண்டர்’ வினியோகம் நிறுத்தப்பட்டது.
வீட்டு வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி, நகரங்களில், 25 நாட்கள், கிராமங்களில், 45 நாட்கள் என, அதிகரிக்கப்பட்டது. பின், வணிகப் பிரிவுகளுக்கு, 50 சதவீதம் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
அதேநேரம், வீடுகளுக்கு அறிவித்துள்ள கால இடைவெளியில், சிலிண்டர் முன்பதிவு செய்தாலும், முன்பதிவு செய்ய முடிவதில்லை. சிலிண்டர் முன்பதிவு செய்தாலும், 10 நாட்களுக்கு மேலாகியும், வீடுகளுக்கு சிலிண்டர் வருவதில்லை. இதனால், மக்கள் பதற்றமாகி, ஏஜன்சிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
அங்கு வருவோருக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படுவதால், அனைவரும் அங்கு செல்ல, ஏஜன்சிகள் முன், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால், வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் தடைபட்டுள்ளது.
சென்னையில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, மேடவாக்கம் உட்பட பல இடங்களில், ஏஜன்சிகள் முன் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதேநிலை பல்வேறு மாவட்டங்களில் உள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: சிலிண்டர் முன்பதிவு செய்ய, 25 நாட்கள் காத்திருந்து, முன்பதிவு செய்தாலும், 10 நாட்களாகியும் சிலிண்டர் வருவதில்லை. முன்பதிவு செய்து, பல நாட்கள் கடந்தும், ஓ.டி.பி., எண் வருவது இல்லை.
இது குறித்து, ஏஜன்சிகளுக்கு சென்று பணியாளர்களிடம் கேட்டால், ‘சிலிண்டர் வரவில்லை; அதனால் தாமதமாகிறது’ என்று அலட்சியமாக கூறுகின்றனர். வீட்டில் உள்ள சிலிண்டரும் தீர்ந்து விட்டது. அதேசமயம், சிறிய உணவகங்கள், டிபன் கடைகளில், வீட்டு சிலிண்டர் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த சிலிண்டர் கிடைக்கிறது.
ஏஜன்சிகளில் இருந்தே, வீடுகளுக்கு வினியோகம் செய்ய வேண்டிய சிலிண்டர்களை, ஒரு சிலிண்டர் 2,000 ரூபாய் என, முறைகேடாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏஜன்சி நிறுவனங்கள், முன்பு போல் வீடுகளுக்கு உடனுக்குடன் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்ய, எண்ணெய் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
