சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு உள்ள மேல்முறையீடுகளை, வரும் மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக, கடற்கரையில் இருந்து, 500 மீட்டர் துாரத்துக்குள் பங்களாக்கள், ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளன. விதிகளை மீறி இந்த கட்டடங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2018ம் ஆண்டு, 798 கட்டட உரிமையாளர்களுக்கு எதிராக, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
இதில், துணை முதல்வர் உதயநிதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், இந்த வழக்குகள் நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதிர்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில், மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து, 798 உரிமையாளர்களில் 440 பேர் அரசிடம் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
இதில், 84 மேல்முறையீடுகள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள மேல் முறையீடுகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், மீதமுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து, கட்டட உரிமையாளர்கள் தரப்பு விளக்கம் அளிக்க, மார்ச் 30 வரை அவகாசம் வழங்கினர். பின், விசாரணை நடத்தி, வரும் மே 31க்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்.,27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, ‘சென்னையின் நீண்ட கடற்கரை, அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதால், இப்பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது முக்கியம். எனவே, உத்தண்டிக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என, வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
