சென்னை: சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில், சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
பின், மா.கம்யூ மாநில செயலர் சண்முகம் கூறியதாவது: பா.ஜ., தமிழகத்தில் காலுான்ற தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் முதல் நோக்கம். எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, இரண்டாவது முக்கியமான நோக்கம்.
மாநில அரசின் நிதி நிலைமை, மாநில அரசின் அதிகாரம் உள்ளிட்டவற்றை வைத்து, எங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை வைத்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்பது போல், பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் உள்ளன.
‘பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் போடுவேன்; தாய்மாமன் சீர் கொடுப்பேன்’ என, த.வெ.க., தலைவர் விஜய் சொல்வது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் மது உற்பத்திக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் உறுதுணையாக இருப்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
