சென்னை: சென்னை மாதவரத்தில், ஒப்பந்தப்படி வீடுகளை ஒப்படைக்காத வழக்கில், சுதீஷ் மீது புதிதாக புகார்களை பதிவு செய்ய, ‘ரெரா’ எனப்படும் ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், அவரது மனைவி பூர்ணஜோதி ஆகியோர், மாத வரத்தில் உள்ள நிலத்தில், ‘லோகா டெவலப்பர்ஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதில், கட்டப்பட்ட வீடுகள் குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கப்படவில்லை என, பாலதண்டபாணி உட்பட ஐந்து பேர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இத்திட்டத்தில் கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, பல்வேறு குறைபாடுகளை மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். இதில், குறிப்பிட்ட சிலருக்கு, கட்டுமான நிறுவனம் மற்றும் நில உரிமையாளர்கள், விற்பனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
எனவே, எஞ்சிய நபர்கள், நில உரிமையாளர்கள் சுதீஷ், பூர்ணஜோதி ஆகியோர் மீது, புதிதாக தங்கள் புகார்களை பதிவு செய்ய அனுமதிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
