சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் 2026ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 93.28 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
சென்னை மக்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான பயணத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 93 லட்சத்து 28 ஆயிரத்து 937 பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக ஜன.9ம் தேதி மட்டும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 476 பேர் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
2026ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் சிங்கார சென்னை என்ற பயண அட்டை சேவையை பயன்படுத்தி 46 லட்சத்து 52 ஆயிரத்து 834 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பயண அட்டையை கொண்டு 43, 107 பேரும் பயணித்துள்ளனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிக்கெட்டுகள் மூலம் 19 லட்சத்து 60 ஆயிரத்து 685 பேர் மெட்ரோ ரயிலில் சென்றுள்ளனர். தொடர்ந்து இதுபோன்று ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளித்து வரும் பயணிகளுக்கு நன்றி.
இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறி உள்ளது.
