சென்னை; சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், மே 12ம் தேதி நேரில்

சென்னை; சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், மே 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மீண்டும், ‘சம்மன்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், கடந்த ஆண்டு ஏப்., 6ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.

பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார்; பின், அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.

இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.மகேஷ், கே.பிரேம் ஆனந்த் ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜூனில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, 3வது மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி நேரில் ஆஜராகவில்லை.

ஆனால், அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளதால், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்ற நீதிபதி, மே 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Source link