சென்னை: ''டில்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகின்றன'' என, அ.தி.மு.க., கூட்டணியை முதல்வர்

சென்னை: ”டில்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகின்றன” என, அ.தி.மு.க., கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், ‘சோனியாவை சந்திக்க, ஆறு மணி நேரம் கருணாநிதி காத்திருந்தது, மறந்து போய் விட்டதா’ என ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., கேள்வி எழுப்பி உள்ளது.

தி.முக., தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தை வஞ்சித்து வரும், மத்திய பா.ஜ., அரசினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு, எண்ணிக்கையில் அடங்காத, சாதனை திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதனால்தான், சட்டசபை தேர்தல் களத்தை, தமிழக அணிக்கும், டில்லி அணிக்குமான தேர்தல் என, தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

வஞ்சிக்கப்படும் நிதி

அதை நிரூபிப்பது போலவே, டில்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுன்றன. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அவரது சகாக்களும், டில்லியில் இருப்பது எதற்காக; தமிழகத்திற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கி தருவதற்காகவா. காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்குவதற்காகவா. இல்லவே இல்லை.தமிழக வீடுகளில், அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன், கூட்டணி பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறனர். இவர்கள் கைகளில், தமிழகம் சிக்கிக் கொண்டால், ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை மக்கள் அறிவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கருத்தை வலியுறுத்தி அமைச்சர் நேரு வாயிலாகவும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஸ்டாலினுக்கு பதில் அளித்து அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:கடந்த 2011ல், டில்லி சென்று, ஆறு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கருணாநிதியும், ஸ்டாலினும் கூட்டணி பேசினர். மகளுக்கு, ‘திகார்’ என காங்கிரஸ் சொல்ல, ‘பகீர்’ என பதறிப் போய், வயதான காலத்திலும் டில்லிக்கு பறந்து போய், சோனியாவை சந்தித்தார் கருணாநிதி.

63 நாயன்மார்கள்

அறிவாலய மேல் மாடியில் நடந்த ரெய்டுக்கு பயந்து, கீழ் மாடியில், ’63 நாயன்மார்களை கொடுக்கிறேன்’ என்று கூட்டணி பேசியவர் கருணாநிதி. தென் மாவட்டங்களில், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, டில்லியில், ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க,வைப் பார்த்து பேச எந்த அருகதையும் இல்லை. சென்னையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இல்லத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து, கூட்டணி பேச்சு நடத்தியபோது, ஸ்டாலின் கோமாவில் இருந்தாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அளித்த பேட்டியில், ”தமிழகத்துக்கு நிதியை பெற்றுத் தர அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் டில்லி செல்கின்றனரா, என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். மத்திய அரசு, எவ்வளவு நிதி கொடுத்தாலும், அதை கபளீகரம் செய்வதால், தி.மு.க.,வை மாற்ற, மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்,” என்றார்.

தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், “கடந்த, 2011ல், சென்னையில் அறிவாலயத்தின் முதல் தளத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை செய்தனர். தரை தளத்தில் ஸ்டாலின் தலைமையில், காங்கிரசின் சிதம்பரம், தங்கபாலு ஆகியோர் கூட்டணி பேச்சு நடத்தி முடிவு பெறவில்லை. உடனே, அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த அழகிரி, தயாநிதியை டில்லிக்கு கருணாநிதி அனுப்பினார்.

அவர்கள், சோனியா காலை பிடித்து கெஞ்சியதும், ‘ராஜா, கனிமொழி சிறைக்கு செல்வர்; தயாளு சிறைக்கு போக மாட்டார்’ என சோனியா கூறியதை அடுத்து, கூட்டணி பேச்சை முடித்தனர். இதை தி.மு.க.,வினர் மறந்து விட்டனர்,” என்றார்.

Source link