சென்னை : தங்க வர்த்தக மோசடி வழக்கில் சாதகமான உத்தரவை பெற, நீதிபதிக்கு கொடுப்பதற்கு எனக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம், மூத்த வழக்கறிஞர் ஒருவர், 50 லட்சம் ரூபாய் பெற்றதாக, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மூத்த வழக்கறிஞர் பணம் வாங்கினாரா என விசாரிக்கும்படி, நீதிமன்ற விஜிலன்ஸ் விசாரணைக்கு, தனி நீதிபதி எம்.நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை என்.எஸ்.சி., போஸ் சாலையைச் சேர்ந்தவர்கள், கணேஷ் அகர்வால் மற்றும் நரேஷ் பிரசாத் அகர்வால். இவர்கள், 89.90 கோடி ரூபாய், தங்க வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
கடிதம்
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நரேஷ் பிரசாத் அகர்வாலும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கணேஷ் அகர்வாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2017 ஏப்., 17ல், இருவரின் மனுவை ஏற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரின் மனுக்களையும், கடந்த ஆண்டு செப்., 22ம் தேதி முதல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பாரிமுனை, தம்பு செட்டி தெருவில் உள்ள, நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் என்ற பெயரில், நீதிபதிக்கு கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில், ‘இந்த வழக்கில் மனுதாரர்களுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஒருவர், சாதகமான உத்தரவை பெற, நீதிபதிக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பெற்று உள்ளார்’ என குறிப்பிடப் பட்டிருந்தது.
இக்கடிதத்தை, சம்பந்தப்பட்ட சங்கம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சி.பி.ஐ., மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கும் அனுப்பி இருந்தது. இதையடுத்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பியது.
நேரில் விசாரணை
இந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற பதிவாளர், நீதிபதி எம்.நிர்மல்குமார் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவர், சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞரை நேரில் அழைத்து விசாரித்தார்.
அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த மூத்த வழக்கறிஞர், ‘எந்த விசாரணைக்கும் நான் தயார்’ என, தெரிவித்தார்.
சி.பி.ஐ., சிறப்பு பிளீடர் கே.சீனிவாசன் ஆஜராகி, ”நீதிமன்றத்தின் கண்ணியத்தை பாதிக்கும் இதுபோன்ற கடிதங்களை புறந்தள்ள வேண்டும். கடிதத்தை அனுப்பிய நபர்களை கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:
நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அளித்த கடிதத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் வைத்து, இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்தின் விஜிலன்ஸ் விசாரணைக்கு அனுப்புவது பொருத்தமானது என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.
உத்தரவு
மேலும், இந்த வழக்கு விசாரணையிலிருந்து நான் விலகுகிறேன்.
வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்ற, தலைமை நீதிபதியிடம் ஆவணங்களை அளிக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க, விஜிலன்ஸ் பிரிவு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
