சென்னை: தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார்களை சந்தித்து, சிறுபான்மையின மக்களுக்கு மத்திய அரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார்களை சந்தித்து, சிறுபான்மையின மக்களுக்கு மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விரிவாக தெரிவித்ததை போல், தலித் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளையும், மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர்.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ‘பா.ஜ., மதவாத கட்சி; கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், தலித் மக்களுக்கு எதிரான கட்சி’ என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், மக்களிடம் பொய் பிரசாரம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுதும் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இந்த உண்மையை மக்களிடம் தெரிவித்து, தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் முயற்சியில் பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்து, ஒவ்வொரு தரப்பு மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளனர். அதன்படி, தமிழக பா.ஜ., சிறுபான்மையினர் அணி சார்பில், சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் போதகர்களுடன், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தினார்.

அதில், சிறுபான்மையின மக்களுக்கு மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள், அவற்றை தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் பயன் பெற விடாமல் தி.மு.க., எப்படி எல்லாம் தடுத்தது உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதேபோல், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, ஜிதன்ராம் மஞ்சி உள்ளிட்டோர் தமிழகம் வந்து தலித், முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைக்க உள்ளனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிருப்தி சிறுபான்மையினர் பட்டியலில் கிறிஸ்துவர், முஸ்லிம் மட்டுமின்றி, சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சி, அய்யா வழியை பின்பற்றுவோர் மற்றும் மெய் வழி சாலை சமூகத்தவர் உள்ளனர். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் அதிகம் வசிக்கின்றனர். கிறிஸ்துவர், முஸ்லிம்களை மட்டும் மத்திய அமைச்சர்கள் சந்திக்க இருப்பது, சிறுபான்மையினர் பட்டியலிலுள்ள மற்ற பிரிவு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Source link