சென்னை: தமிழகத்தில் ஏழை மக்களுக்கு மானிய விலையில், வீட்டுவசதி வழங்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

சென்னை: தமிழகத்தில் ஏழை மக்களுக்கு மானிய விலையில், வீட்டுவசதி வழங்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் ஆட்சேபகரமான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள், சிதிலமடைந்த குடியிருப்புகளில் வசிப்போர் என, பல்வேறு தரப்பினருக்கு மானிய விலையில் வீடுகள் வழங்கப் படுகின்றன.

இந்நிலையில், ஒதுக்கீடு போக உபரியாக உள்ள வீடுகளை, குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் மக்களுக்கு சலுகை விலையில் விற்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.

இது தொடர்பான அறிவிப்பு அடிப்படையில், 10,000க்கு மேற்பட்டோர், ‘ஆன்லைன்’ முறையில் விண்ணப்பித்துள்ளனர். அதே நேரத்தில், 20,000 வரை வீடுகள், மனைகள் இருப்பில் உள்ளன.

பொது மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தும், அவர்களுக்கு வீடு ஒதுக்க, அதிகாரிகள் தயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், விண்ணப்பித்தவர்கள் வீடு கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.

இது குறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சலுகை விலையில் மக்களுக்கு வீடு வழங்க தயாராக இருக்கிறோம். இதற்காக, ஆன்லைன் முறையில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருகிறோம். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, வீடு ஒதுக்கீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்ததும் வீடுகள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link