சென்னை: தமிழகத்தில் சீர்மரபினருக்கு, மத்திய அரசின் உதவிகளை பெற, டி.என்.டி., எனப்படும் சீர்மரபினர் பழங்குடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாநில அரசின் உதவிகளை பெற, டி.என்.சி., எனப்படும் சீர்மரபினர் சமுதாயம் என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு இரண்டு விதமான சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மாற்றி, டி.என்.டி., என ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாக சீர்மரபினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2024ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடை யும் நிலையில், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த சீர்மரபினர், இரட்டை சான்றிதழ் விவகாரத்தில், முதல்வர் ஸ்டா லின் வாக்குறுதி அளித்தபடி, ஒரே சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில், சீர்மரபினர் ஜாதி சான்றிதழ் எரிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
