சென்னை: ”தமிழகத்தில், தெருவுக்கு தெரு மதுக் கடைகளை திறந்து, குடிப்பழக்கம் இல்லாதவர்களையும், குடிப்பழக்கத்திற்கு மாற்றி வரும், ஒரே அரசு தி.மு.க., அரசு தான்,” என, தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., இளைஞர் அணி சார்பில், தமிழக அரசை கண்டித்து, சென்னை எழும்பூரில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் இளைஞரணி நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், மாநிலம் முழுதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை ஆர்ப்பாட்டத்தில், சூர்யா பேசியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, போதைப்பொருள் பழக்கம், இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கு எதிராக, தி.மு.க., செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து, குடிப்பழக்கம் இல்லாதவர்களையும், குடிப்பழக்கத்திற்கு மாற்றக்கூடிய ஒரே அரசு, தி.மு.க., அரசு தான்.
போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து, மக்கள், போலீசாருக்கு தகவல், அளித்தால், அதன் விபரங்கள் வெளியே கசிகிறது. தி.மு.க., உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருப்போர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
***
