சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என பல பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், விளவங்கோடு தாலுகாவில், 12 பழங்கால சிவன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு, மஹா சிவராத்திரி அன்று, பக்தர்கள் ஓடிச்சென்று வழிபடுவது வழக்கம். இது, சைவ – வைணவ சமயங்களை இணைக்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
அதன்படி கையில் விசிறி, இடுப்பில் திருநீற்றுப்பையை கட்டிக்கொண்ட பக்தர்கள், ‘கோபாலா… கோவிந்தா…’ என, கோஷமிட்டபடி ஓடினர். முஞ்சிறையில் தொடங்கிய சிவாலய ஓட்டம், திருநட்டாலத்தில் நிறைவடைந்தது.
பக்தர்கள் வழிபட சென்ற, 12 சிவன் கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பல்வேறு நகரங்களில் பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
