சென்னை: தமிழகம் முழுதும் 234 தொகுதிகளில் நேற்று நடந்த த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் பெயரளவிற்கு நடந்ததால்,

சென்னை: தமிழகம் முழுதும் 234 தொகுதிகளில் நேற்று நடந்த த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் பெயரளவிற்கு நடந்ததால், கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க., சார்பில் நேற்று 234 தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ‘தொகுதியின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதித்து, செயல்படாத நிர்வாகிகள், பூத் பிரச்னைகள் போன்றவற்றை அறிக்கையாக தலைமைக்கு அளிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுதும் கூட்டங்கள் நடந்தன.

பொதுச்செயலர் ஆனந்த், சென்னை தி.நகர் தொகுதியிலும், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட தொகுதிகளிலும் பங்கேற்றனர். தலைமை கழக நிர்வாகிகள், துவக்க உரையாற்றிவிட்டு சென்ற பின், விஜய் பட பாடல்களை இசைக்கவிட்டு, கட்சியினர் ஆடி மகிழ்ந்தனர். தேர்தலுக்காக எந்தவித ஆலோசனையும் நடத்தாததால், பெரும்பாலான மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் பிசுபிசுத்து விட்டது.

சென்னை துறைமுகம், சைதாப்பேட்டை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு மாவட்டச் செயலர் நியமிக்கப்படவில்லை. அதோடு, 1,100 ஒன்றியங்களுக்கும், 5,200 கிளை கழகங்களுக்கும் அதிகாரப் பூர்வமாக நிர்வாகிகள் நியமிக்கவில்லை. 16,000 ஓட்டுச்சாவடிகளில், ‘பூத் கமிட்டி’ அமைக்கவில்லை.

இதன் காரணமாக, பல தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் முறையாக நடக்கவில்லை. தொகுதியின் சாதக, பாதகங்கள் பற்றி, மாவட்டச் செயலர்களே அறிக்கை தயார் செய்து தலைமைக்கு அனுப்பி உள்ளனர். இதனால், செயல்வீரர்கள் கூட்டத்தின் நோக்கமே சிதைந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link