சென்னை: ”தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; அதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், சென்னையில் கடந்த இரண்டு நாளாக ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டி:
இந்தியா, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு. தேர்தல் தொடர்பாக சமீபத்தில், 72 நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், 10ம் நுாற்றாண்டில், தமிழகத்தில் இருந்த குடஓலை தேர்தல் முறை குறித்து பெருமையாக பேசினோம். ஜனநாயகத்தை காப்பதில், தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது, தமிழகத்துக்கு பெருமை.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும், தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் ஆகலாம். எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் குறித்து வெறும், 267 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. அவற்றில் பல தீர்க்கப்பட்டு விட்டன. அதன்படி, எஸ்.ஐ.ஆர்., பணிகள் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், 18 முதல் 19 வயது வரை, 12.51 லட்சம் இளைஞர்களும், 20 முதல் 29 வயது வரை, 1.05 கோடி இளைஞர்களும் வாக்காளர்களாக உள்ளனர். இந்த தேர்தலில், அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
அதிகபட்சம், 756 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைத்துள்ளோம். முதல்முறையாக, ‘விவிபேடில்’ வேட்பாளரின் கலர் போட்டோ இடம்பெற உள்ளது. ஓட்டுப்பதிவு அன்று, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான ஓட்டுகளின் சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதேபோல, ஓட்டு எண்ணிக்கையின்போது, கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே, தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.
வாக்காளர் அட்டைகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஏனென்றால், ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பலவும், ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்த கோரிக்கை வைத்துள்ளன. அதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதேநேரத்தில், பண்டிகை, பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதே என்ற கேள்விக்கு, ”கடந்த 10 ஆண்டுகளில், பீஹார் சட்டசபை தேர்தல்தான் சிறப்பாக நடந்தது. அதை விடவும் தமிழக தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். அதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என, ஞானேஷ்குமார் பதிலளித்தார்.
முன்னதாக, தமிழக உயர் அதிகாரிகளிடன், தேர்தல் தொடர்பாக ஞானேஷ்குமார் ஆலோசித்தார். தொடர்ந்து, தமிழகம் முழுதுமிருந்து சிறப்பாக செயல்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களை கவுரவித்து, அவர்களுடன் தேர்தல் அதிகாரிகள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டால், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடக்கவும், அதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவும் வாய்ப்பு அதிகம் என, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
