சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு நாட்களாக நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையை முடித்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஒரே கட்டமாக, வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., – நாம் தமிழர் என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒரு சில கட்சிகள் தனித்தும், சிறிய அளவில் கூட்டணி அமைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது; 6ம் தேதி வரை நடந்தது.
பொது விடுமுறை போக, நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கலுக்கு, கட்சிகளுக்கு அவகாசம் கிடைத்தது. மொத்தமாக 234 தொகுதிகளுக்கும் சேர்த்து, 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல வேட்பாளர்கள், தங்கள் சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்ததுடன், மாற்று வேட்பாளர்களாக சிலரை நிறுத்தி, மனு தாக்கல் செய்ய வைத்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, 7ம் தேதி நடந்தது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு, 9ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 234 தொகுதிகளில் போட்டியிட, 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கரூர் சட்டசபை தொகுதியில், 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிகளில் தலா, ஐந்து வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் தலா, ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதியிலும்; அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலம் இடைப்பாடி தொகுதியிலும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.
த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் தொகுதிகளிலும்; நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியிலும் களமிறங்கி உள்ளனர்.
அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அவர்களுக்குரிய சின்னங்களும், மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சைகளுக்கு விரும்பிய சின்னங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான விபரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
ஓட்டுச்சாவடிகளில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெற்ற, ‘போஸ்டர்’ அச்சடிப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
தேர்தல் பிரசாரம் வேகமெடுத்துள்ளதால், வாக்காளர்களுக்கு கவனிப்பு, தேர்தல் விதிமீறல், செலவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்த, தேர்தல் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 419 வேட்பாளர்கள்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில், 616 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில், உரிய ஆவணங்கள் இல்லாத 173 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், 24 பேர், வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இறுதியாக, 419 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
