சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம்; புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து,

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம்; புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து, த.வெ.க., தலைவர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு, ஏப்.,9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. வரும் 23ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதுச்சேரி தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் 50 பேர், நேற்று சென்னை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்களிடம், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் நேர்காணல் நடத்தினார். அப்போது தேர்வு செய்யப்பட்ட 30 பேரிடம், விஜய் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோருடன், விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக தேர்தலில், த.வெ.க., வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும், விஜயின் பிரசார சுற்றுப் பயண திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை அல்லது வரும் 20ம் தேதி, புதுச்சேரிக்கான த.வெ.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

இம்மாதம் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்திவிட்டு, ஏப்., 7ம் தேதி வரை புதுச்சேரியில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.

அப்போதே அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலுாரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். மொத்தமாக தமிழகம் முழுதும் 25 நாள்கள் பிரசார செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link