சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தீயணைப்பு, மின்சாரம் உட்பட, கூடுதலாக ஐந்து துறைகளில் உள்ள அத்தியாவசிய பணியாளர்கள் தபால் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாக்காளர்கள், ’12 டி’ படிவத்தை, தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குள், ஓட்டுச்சாவடி அலுவலர் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டு சேகரிக்கும் குழுக்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று ஓட்டுகளை சேகரிப்பர்.
மேலும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாக்காளர்கள், தங்கள் துறையில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வாயிலாக, தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவை, விமான போக்குவரத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் போனறவை இந்த வசதியின் கீழ் வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களும், தபால் ஓட்டு செலுத்த தகுதியுடையவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
