சென்னை: தமிழக பகுதிக்கு கேரளம் சொந்தம் கொண்டாடுவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள, தமிழக எல்லையான தாளூர், கேரள மாநிலம் வயநாடு மாவட்ட எல்லையாகவும் உள்ளது. அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பிரச்னை எழுந்துள்ளது. தாளூர் பகுதியில், ‘கேரளம் உங்களை வரவேற்கிறது’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் பாதுகாப்பு, நீர்மட்டம் போன்றவைகளில், இரு மாநிலங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில், தமிழக பகுதிக்கு கேரளம் சொந்தம் கொண்டாடுவது சரியல்ல. தமிழகத்தின் பகுதிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
