சென்னை: ”தமிழக வெற்றிக் கழகத்தால் தி.மு.க., வெற்றி நிச்சயம் பாதிக்காது; இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, நடிகர் விஜயின் அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,” என, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கூறினார்.
வில்லிவாக்கம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் கார்த்திக் மோகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று, தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் உள்ள குடியிருப்போர் நல சங்க தலைவர்களிடம் ஆதரவு கேட்கும் கூட்டம், வில்லிவாக்கத்தில் உள்ள சிட்கோ நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
அப்போது, முதல்வர் ஸ்டாலினின் மருமகனும், வேட்பாளர் கார்த்திக்கின் நண்பருமான சபரீசன், தன் மனைவி செந்தாமரையுடன் திடீரென மண்டபத்துக்கு வந்தார்.
கூட்டத்தில் சபரீசன் பேசுகையில், ”வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி, என்னுடைய நண்பர். நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.
”அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்கு என்ெனன்ன தேவையோ, அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார். அதற்கு நான் கியாரன்டி,” என, வாக்குறுதி அளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி தொடரும். மக்கள் விரும்பும் அளவுக்கு நிறைய மக்கள் நலதிட்டங்களை ஐந்தாண்டுகளில் செயல்படுத்தி உள்ளனர். அதனால், தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ஒன்று கிடையாது.
அரசியலில் புது வரவான, த.வெ.க.,வால் தி.மு.க.,வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. த.வெ.க., தலைவர் விஜய், இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அப்படி போட்டியிடுவது, ஒரு தலைவரின் அவநம்பிக்கையை தான் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பேசினார்.
