சென்னை: திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளுடன், 2028ல் ஒரு ராஜ்யசபா சீட்டும் பெற வேண்டும் என்று விடுதலை

சென்னை: திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளுடன், 2028ல் ஒரு ராஜ்யசபா சீட்டும் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் உயர்நிலைக் குழுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளுக்கு மொத்தமாக 48 தொகுதிகள் இதுவரை ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கையெழுத்தான நிலையில், விடுதலை சிறுத்தைகளுடன் இன்னமும் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் தருமாறு திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்துவதால் இழுபறி நீடிக்கிறது. திமுக தருவதாக கூறப்படும் தொகுதிகள் எண்ணிக்கையில் திருப்தியில்லாத சூழலில், கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளுடன், 2028ல் ஒரு ராஜ்சபா எம்பி சீட்டும் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் வருமாறு;

1. சட்டசபை தேர்தலில், விடுதைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி 200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றியைப் பெற கூட்டணி கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களோடு இணைந்து மிகுந்த பொறுப்புணர்வோடும் தீவிர முனைப்போடும் களப்பணி ஆற்றுவோம்.

2. தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள சட்டமன்ற, பார்லி. தொகுதிகளின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைத்து, 234 தொகுதிகளையும் ‘தொகுதி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திவரும் அநீதியானப் போரை உயர் நிலைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்க அதிபரைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

4. ஈரான் போரை நிறுத்துவதற்கு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா முழுமூச்சாகப் பாடுபட வேண்டும்.

5. அமெரிக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டைத் திருத்திக்கொண்டு பாஜ ஆட்சிக்கு முன்பு வரை மத்திய அரசு கடைப்பிடித்து வந்த நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

6. ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணெய், எரிவாயு விலையை அதிகரிக்கக்கூடாது.

7. தேர்தல் பறக்கும் படையினர் சிறு வணிகர்களின் சிறு சிறு தொகைகளைக்கூட பறிமுதல் செய்வதை நிறுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ‘இரட்டை இலக்கத்தில்’ தொகுதிகளை கேட்டு பெற வேண்டும், 2028ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source link