சென்னை: திருச்சி மண்டலத்திற்குட்பட்ட அரசு பஸ்ஸில் தவெக விளம்பரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தமிழக போக்குவரத்து நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான TN 45 M4853 என்ற எண் கொண்ட அதிவிரைவுப் பஸ், திண்டுக்கல், திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பஸ்சில் வழித்தட விபரங்களை காண்பிக்கும், டிஜிட்டல் பலகையில், ஊர்களின் பெயர் விபரங்கள் இல்லாமல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் ஆங்கலத்தில் ஒளிபரப்பப்பட்டது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதனை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், உடனடியாக டிஜிட்டல் பெயர் பலகையில் மாற்றம் செய்யப்பட்டு விட்டதாக தமிழக போக்குவரத்துறை தரப்பிலி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துறை வெளியிட்ட அறிக்கையில்; சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் உள்ள பஸ்ஸானது, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பஸ் ஆகும். இந்த பஸ்சில் உள்ள டிஜிட்டல் வழித்தடப் பலகையில் சில வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பஸ்சின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, இத்தகைய தவறான வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது.
• இச்சம்பவம் நேற்று கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த டிஜிட்டல் பலகையின் மதர்போர்டு (Motherboard) மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன.
• இது போன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், டிஜிட்டல் பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
