சென்னை : தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேர்ந்தது. 'பழம் நழுவி பாலில் விழும்' என்று, 2016ல் மறைந்த கருணாநிதி

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேர்ந்தது. ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று, 2016ல் மறைந்த கருணாநிதி கூறியது, 2026ல் நிஜமாகி உள்ளது. சென்னை அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கூட்டணியை உறுதி செய்தார், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா.

தே.மு.தி.க., வரவை எதிர்பார்த்து காத்திருந்த, பா.ஜ., – அ.தி.மு.க., தலைவர்களுக்கு, பிரேமலதாவின் முடிவு அதிர்ச்சியை தந்துள்ளது. தி.மு.க.,வா, அ.தி.மு.க.,வா, எந்த கூட்டணியில் தே.மு.தி.க., சேரும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் நீடித்து வந்தது.

அ.தி.மு.க., – பா.ஜ., இணைந்த தே.ஜ., கூட்டணியில் தான், இக்கட்சி சேரும் என்ற பேச்சு பலமாக அடிபட்டது. அதற்கு வலுவூட்டும் வகையில், கோவை ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும் பங்கேற்றனர். அதனால், தங்கள் கூட்டணிக்குத் தான் தே.மு.தி.க., வந்து சேரும் என, அ.தி.மு.க., – பா.ஜ., தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக, தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், மாநில துணை செயலர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகளுடன், நேற்று காலை அறிவாலயம் சென்றார் பிரேமலதா. அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., கூட்டணியை உறுதி செய்தார். பிரேமலதா உள்ளிட்ட அவரது கட்சி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தாமதமாக அமைந்த கூட்டணி

அறிவாலயத்தில் நடந்த சந்திப்புக்கு பின், பிரேமலதா அளித்த பேட்டி: தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் விரும்பிய இந்தக் கூட்டணி, விஜயகாந்த் இல்லாத இந்த நேரத்தில் அமைந்திருக்கிறது.

கடந்த 2016-ல் இந்த கூட்டணி அமைய வேண்டியது. ‘பழம் நழுவி பாலில் விழும்’ என கருணாநிதி கூறினார். ஆனால், 10 ஆண்டுகள் கழித்து தாமதமாக இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது.

எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள், யார் யார் வேட்பாளர்கள் என்பது குறித்து, குழு அமைத்து இரு கட்சிகளும் பேசி முடிவு செய்யும். முதல்வர் ஸ்டாலின் அதை அறிவிப்பார். தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., முதல் முறையாக கூட்டணி அமைத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.

அதனால், இந்தக் கூட்டணி, 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும். ராஜ்யசபா எம்.பி., ‘சீட்’ தருவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இணைந்து பயணிப்போம்.

தே.மு.தி.க., கூட்டணி குறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதி மேல் மாறாத அன்பு கொண்டவரும், என் அன்பு நண்பருமான விஜயகாந்த் உருவாக்கிய தே.மு.தி.க., இப்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

விஜயகாந்த் உருவாக்கிய கட்சியை திறமையாக வழி நடத்தி வரும் பிரேமலதாவையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு, சிவப்பை கொடியில் தாங்கியிருக்கும் தே.மு.தி.க.,வின் நல்வரவு, நல்லுறவு தமிழகத்தின் உயர்வுக்கு பங்களிக்கட்டும். தி.மு.க, ஆட்சி தொடரவும், தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தே.மு.தி.க.,வின் திடீர் முடிவால், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும், தே.மு.தி.க.,வை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பல முறை பேச்சு நடத்தியும், அவர்களால் எந்த உடன்பாட்டையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால், அக்கட்சித் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டணி மலர்ந்தது எப்படி?

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, தே.மு.தி.க., முதல் முறையாக சந்தித்தது. விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். தனித்து போட்டியிட்டு, 8 சதவீத ஓட்டுகளை பெற்றது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 10 சதவீத ஓட்டுகளை பெற்றது. பின், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 எம்.எல்.ஏ.,க்களுடன், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் தொடர்ந்து அக்கட்சி தோல்வியை சந்தித்து வந்தது. 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில்களிலும் தோல்வி அடைந்ததால், தற்போது 2 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வங்கியை தான் தக்க வைத்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், கட்சிக்கு அங்கீகாரம் பெற்றாக வேண்டும்; முரசு சின்னத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதால், கூட்டணி பேச்சில் அவசரம் காட்டாமல் இருந்து வந்தார் பிரேமலதா.
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அதன் தலைமையிலான கூட்டணியில் இணைய, அவர் விரும்பவில்லை. தன் கட்சியினரின் விருப்பத்தின் அடிப்படையில், முதல் முறையாக தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளார். தே.மு.தி.க.,வில் 50க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள், தி.மு.க., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, தி.மு.க., மூத்த அமைச்சர் எ.வ.வேலு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஆகியோருடன் பிரேமலதா பேச்சு நடத்தினார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டிற்கு மட்டும், ஆறு முறை தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் சென்றுள்ளார். தே.மு.தி.க.,வுக்கு ஆறு சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்குவது என பேசப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டதால், இரு கட்சிகள் இடையே கூட்டணி மலர்ந்துள்ளது.

காங்கிரசுக்கு தி.மு.க., ‘செக்’

‘ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்’ என, தமிழக காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. ‘ஆட்சியில் பங்கு இல்லை’ என்பதை, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்து விட்டார். தொகுதி பங்கீட்டில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை. இப்போது, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு ‘செக்’ வைத்து விட்டது, ஆளும் தலைமை. இனி காங்கிரசால் பேரம் பேச முடியாத நிலைமையை, தி.மு.க., ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் விஜய பிரபாகரன்?

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றிருந்தது. விருதுநகர் தொகுதியில், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். வெற்றியின் விளிம்பை எட்டிய விஜய பிரபாகரன், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், கடைசி நேரத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
மாணிக்கம் தாகூர் வெற்றிக்காக உழைத்த தி.மு.க.,வுக்கு எதிராக, இப்போது அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் முன்வந்துள்ளார். தொகுதி பங்கீட்டு பேச்சில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக தெரிகிறது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Source link