சென்னை : துணை முதல்வர் உதயநிதி, தனக்கு 33.92 கோடி ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில்

சென்னை : துணை முதல்வர் உதயநிதி, தனக்கு 33.92 கோடி ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தன் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளார்.

அதன் விபரம்: தன்னிடம் 50,000; மனைவி கிருத்திகாவிடம் 75,000 ரூபாய் ரொக்கம் உள்ளது. மகள் தன்மயா வங்கி கணக்கில், நிரந்தர வைப்பு நிதியாக 2 லட்சத்து 56,940 ரூபாய் உள்ளது.

உதயநிதியிடம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘டிபென்டர்’ கார்; 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘இன்னோவா’ கார்கள் உள்ளன. உதயநிதியிடம் நகைகள் எதுவும் இல்லை. அவரது மனைவியிடம், 1,600 கிராம் தங்க நகைகள் உள்ளன.

மொத்தத்தில் உதயநிதியிடம் 12.92 கோடி; மனைவியிடம் 13.25 கோடி; மகளிடம் 2.56 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 26.20 கோடி ரூபாய்.

இது தவிர, உதயநிதி பெயரில் 7.72 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளன. உதயநிதியின் மொத்த சொத்து மதிப்பு 33.92 கோடி ரூபாய். உதயநிதி பெயரில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. லயோலா கல்லுாரியில் பி.காம்., பட்டப் படிப்பு முடித்துள்ளார்.

உதயநிதி மகன் பெயர் பட்டியலில் இல்லை துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்த சொத்து விபரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தில், தன் பெயரில், மனைவி மற்றும் மகள் பெயரில் உள்ள சொத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அவரது மகன் இன்பன் பெயர் மற்றும் சொத்து விபரங்கள் இடம் பெறவில்லை. அவர் தற்போது, ‘ரெட் ஜெயிண்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். எனவே, மகன் பெயரை தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு, உதயநிதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மகன் பெயர் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ***

உதயநிதி வருமானம் சரிவு; மனைவி வருவாய் உயர்வு
உதயநிதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த ஐந்து நிதியாண்டுகளில், வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் வழியே, உதயநிதியை விட அவரது மனைவி கிருத்திகா வருவாய் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
உதயநிதிக்கு கடந்த 2022 – 23ம் ஆண்டில், 7.94 கோடி ரூபாயாக இருந்த ஆண்டு வருவாய், 2024 – 25ம் ஆண்டில் 10.40 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல், 2023 – 24ம் ஆண்டில், 44.94 லட்சம் ரூபாயாக இருந்த கிருத்திகாவின் வருமானம், 2024 – 25ம் ஆண்டில், 2.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில், உதயநிதியை விட கிருத்திகா வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், உதயநிதி காண்பித்திருந்த சொத்து மதிப்பு தற்போது குறைந்துள்ளது. 2021ல் உதயநிதிக்கு 21.13 கோடி ரூபாய்; கிருத்திகாவுக்கு 1.15 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் இருந்தன. நடப்பாண்டு உதயநிதிக்கு 12.92 கோடி ரூபாய்; கிருத்திகாவுக்கு 13.25 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் உதயநிதிக்கு அசையும் சொத்து குறைந்தும், கிருத்திகாவுக்கு அதிகரித்தும் உள்ளது. கடந்த 2021ல் உதயநிதி சொத்து மதிப்பு 29.07 கோடி ரூபாய்; தற்போது 33.92 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. ***

Source link