சென்னை துறைமுகம் வரும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் முடக்கம் இந்தியாவின் 59 டேங்கர், கன்டெய்னர் கப்பல்கள் தவிப்பு

சென்னை :

இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால், சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் இரண்டு பிரமாண்ட டேங்கர் கப்பல்கள் உட்பட 59 இந்திய கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல், இந்திய துறைமுகங்களில் இருந்து, மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி வசதியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர், ஐந்து நாட்களை கடந்துள்ளது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

பதிலுக்கு ஈரானும் தாக்குவதால், போர் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கிடையே, ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது.

இந்த ஜலசந்தி வழியாக தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லும்.

தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன், 700க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதில், சென்னை துறைமுகத்துக்கு வரும் இரண்டு பிரமாண்ட கப்பல்கள் உட்பட இந்தியாவுக்கு சொந்தமான 59 கப்பல்கள் இருப்பதாகவும், 15,000க்கும் மேற்பட்ட மாலுமிகள், பணியாளர்கள் அவற்றில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்து வர முடியாத நிலை நீடிக்கிறது. மாற்று திட்டங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அதுபோல், இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு அனைத்து வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்வது மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து ஆடைகள், உணவு தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், மருந்துகள், உதிரி பொருட்கள், இதர கருவிகள் உள்ளிட்டவை கொண்டு செல்வது தற்காலிகமாக தடைபட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link