சென்னை: ''தென் மாவட்டங்களை திமுக அரசு தொடர்ந்து பதற்றத்தில் வைத்து இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக

சென்னை: ”தென் மாவட்டங்களை திமுக அரசு தொடர்ந்து பதற்றத்தில் வைத்து இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக கொடூரம் தொடர்கிறது” என மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே, தென் மாவட்டங்களை பதற்றத்தில் வைத்திருக்கிறது. நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், சாலையோர டீக்கடையில் இருந்த மக்களை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளது.

நாங்குநேரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், அங்குள்ள வீட்டின் சுவர் மீதும், எதிரே உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் மீதும், அங்குள்ள கோவில் முன்பும் திடீரென அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது.

வஞ்சிக்கும் திமுக

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. அப்போதே போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுத்திருக்க முடியும். இன்று இரண்டு உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் பட்டியலின மாணவன் சின்னத்துரை, உடன் படிக்கும் மாணவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் கவின், நெல்லை அருகே பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் படும் துன்பம் ஒன்றல்ல. இரண்டல்ல. பட்டியலின மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

சமூக அநீதி

பட்டியலின மக்கள் தொடர்புடைய ஒவ்வொரு வழக்கிலும் திமுக அரசு, ஓரவஞ்சனையுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. வேங்கைவயலில் பட்டியலின மக்களின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. ஆனால் இன்று வரை உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக, புகார் கொடுத்த பட்டியலின மக்கள் மீதே வழக்கு பதிவு செய்து கொடுமை இழைத்தது திமுக அரசு.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இல்லை.

தமிழகம் முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவதாக ஓராண்டுக்கு முன்பு வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில்தான், உலகின் எங்கும் காண முடியாத அளவுக்குப் பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுகிறது.

அவல ஆட்சி

போலீஸ் அதிகாரிகளை சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தாமல் வேறு மாவட்டங்களில் பணியமர்த்தும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவைக் கூட அவரது மகனான இந்நாள் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. போலிச் சமூகநீதி பேசும் ஸ்டாலினும் திமுக அரசும் விழித்துக்கொண்டதாக தெரியவில்லை.

திருப்பூரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்ததைக் கூட இந்த திமுக அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய உளவு அமைப்புகளும், பிற மாநில போலீசாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ளும் அவல நிலையில் திமுக அரசு இருக்கிறது. இப்படி ஒரு அவல ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் திமுகவை, தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அரசை வீழ்த்த, தமிழக மக்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.

Source link