சென்னை: தேர்தலில் ஓட்டளித்ததை உறுதி செய்ய, வாக்காளர்களின் மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை, வடபழனியைச் சேர்ந்த கே.ஆர்.குகேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
ரேஷன் பொருட்கள் வாங்குதல், காஸ் சிலிண்டர் முன்பதிவு, வங்கி பரிவர்த்தனை போன்ற அத்தியாவசிய சேவைகளில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, மொபைல் போன்களுக்கு உடனே குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
அதேபோல், தேர்தல் ஓட்டுப்பதிவில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், பொது மக்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்ததும், அதை உறுதி செய்யும் வகையில், வாக்காளரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 3 மற்றும் கடந்த பிப்., 19ல், தேர்தல் கமிஷனிடம் மனு அளித்து உள்ளேன்.
யோசனையை முதலில் பரிசீலித்து வருவதாக தேர்தல் கமிஷன் கூறியது. ஆனால், அதன்பின் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, வரும் தேர்தலில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை, தேர்தல் கமிஷன் அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
