சென்னை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாம்பரம் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

சென்னை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாம்பரம் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு அக்கட்சியினரிடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடக்க உள்ளது.



அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடித்து பிரசாரத்தில் இறங்க ஆயுத்தமாகி வருகின்றனர். இதற்கிடையே, தி.மு.க.,வில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்வரும் தி.மு.க.,வின் தலைவருமான ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார்.



இதில் ஏற்கனவே எம்.எல்.ஏ., வாக இருந்த பலருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக எஸ்.ஆர்.ராஜா இருந்து வருகிறார். எப்படியும் இந்த முறையும் மீண்டும் எம்.எல்.ஏ., சீட்டு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிய முகமான டாக்டர் கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தாம்பரம் தி.மு.க., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முற்றுகை புதிய வேட்பாளரை மாற்றக் கோரி நேற்று நள்ளிரவு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் இல்லத்தை 500க்கும் மேற்பட்ட கட்சியினர் முற்றுகையிட்டனர்.

தி.மு.க., தாம்பரம் மாவட்ட செயலாளராகவும், மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் இருந்த எஸ்.ஆர்.ராஜாவுக்கே மீண்டும் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமை அறிவித்த புதிய வேட்பாளரின் பெயர் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யார் என்றே தெரியாத ஒருவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? என்ற கேள்வியுடன் இரவோடு இரவாக தாம்பரத்தில் உள்ள டி.ஆர்.பாலுவின் வீட்டை நிர்வாகிகள் வளைத்தனர்.

‘மாற்று… மாற்று… வேட்பாளரை மாற்று’ என கோஷமிட்டு எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கோரி டி.ஆர்.பாலுவிடம் முறையிட்டுள்ளனர்.

கூட்டத்தில் நபர் ஒருவர் அழுததை பார்த்த பாலு ”மற்றவர்களுக்கு எல்லாம் கவலை இல்லையா? என்னய்யா நடிச்சிட்டு இருக்க. நான் என்னகல்லுன்னு நெனச்சியா. உனக்கு முன்னால் இருந்து, சின்னப் பிள்ளையில் இருந்து எனக்கு அவர் நண்பர் தெரியுமா? அவருடைய இன்ட்ரஸ்ட் எனக்கு இல்லையா?

அவருக்கு என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரியாதா? இந்த காரணத்தை எல்லாம் இவ்வளவு பேருக்கு முன்னால் நான் சொல்ல முடியுமா? நீ அழுது சீன் போட்டால் நான் உடனே சொல்லிட வேண்டுமா?

யார் சீன் போடுறவங்க யார் உண்மையா இருக்கின்றவர்கள் என எனக்கு தெரியும்,” என காட்டமாக தெரிவித்தார். புதிய வேட்பாளரால் எதிர்க்கட்சிக்கு வெற்றி எளிதாகிவிடும்; வெற்றிக் கோட்டையைத் தாரைவார்க்காதீர்கள் என நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


Source link