சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக, முதல்வரின் செயலர் ஐ.ஏ.எஸ்., உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக, முதல்வரின் செயலர் ஐ.ஏ.எஸ்., உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, தேர்தல் கமிஷன் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரின் செயலர் பி.உமாநாத்தை, தேர்தல் கமிஷன் உடனே இடமாற்ற செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சூளைமேடு பகுதியை சேர்ந்த, பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், முதல்வரின் சார்பாக, அனைத்து நிர்வாக பணிகளையும், அவரின் செயலர் செயல்படுத்தி வருகிறார்.

உமாநாத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால், தேர்தல் மீதான மக்களின் நம்பிக்கையை, அது முழுதுமாக அழித்து விடும். அவரது செயல்பாடுகள், காவல்துறையின் தொடர்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள், பிறப்பித்த உத்தரவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில், ‘குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கும், தேர்தல் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு வரும், 17ம் தேதிக்குள் பதிலளிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

Source link