சென்னை: ‘தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் த.வெ.க., தலைவர் விஜய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என, மணிப்பூர் கவர்னருக்கு, அவரது கட்சி நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை செயலர் என நினைத்து, தவறுதலாக கவர்னருக்கு கடிதம் அனுப்பிய தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மார்ச் 30ல் பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அங்கு பிரசாரமும் மேற்கொண்டார்.
அலைமோதிய கூட்டம்; பிரசாரம் ரத்து
அங்கிருந்து, கொளத்துார் தொகுதிக்கு பிரசாரம் செய்ய வாகனத்தில் சென்றார்; த.வெ.க., தொண்டர்களும், ரசிகர்களும் வழி நெடுக வரவேற்பு அளித்தனர். கொளத்துார் அகரம் ஜங்ஷன் பகுதியில் விஜய் நுழைந்ததும், அங்கு கூட்டம் அலைமோதியது; அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதனால், விஜயால் அங்கு முழுமையாக பேச முடியவில்லை. பதற்றமான விஜய், வில்லிவாக்கம் பகுதியில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து, பாதிலேயே வீட்டுக்கு திரும்பி விட்டார்.
சென்னை போலீசின் பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம் என, த.வெ.க., தரப்பில் புகார் கூறப்படுகிறது. தேர்தல் கமிஷனிலும் த.வெ.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நிர்மல் குமார் கடிதம்
இச்சூழலில், விஜய் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், அது தொடர்பாக தமிழக போலீசுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்படியும், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை செயலர் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
குறைபாடு
இந்த கடிதத்தில், மத்திய உள்துறை செயலராக த.வெ.க.,வால் குறிப்பிடப்பட்டுள்ள அஜய் குமார் பல்லா தற்போது மணிப்பூர் கவர்னராக இருக்கிறார். உள்துறை செயலர் பொறுப்பில் இருந்து அவர் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது, உள்துறை செயலராக கோவிந்த் மோகன் என்பவர் இருக்கிறார்.
இந்த விபரம் தெரியாமல், மணிப்பூரில் கவர்னராக உள்ள பழைய உள்துறை செயலருக்கு த.வெ.க., கடிதம் எழுதியுள்ளது, சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
த.வெ.க., அனுப்பி உள்ள கடிதம்:
மத்திய உள்துறையால், த.வெ.க., தலைவர் விஜய்க்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவரது பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளன. சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய், பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த பின், அங்கு பிரசாரம் மேற்கொண்டார்.
அங்கிருந்து, கொளத்துார் தொகுதிக்கு செல்லவும் திட்டமிட்டப்பட்டது. ஆனால், சென்னை காவல் துறை அதிகாரிகள் போதிய அளவில் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை, வழித்தட மேலாண்மை ஆகிய ஏற்பாடுகளை செய்யவில்லை.
இதனால், மக்கள் கூட்டம் அதிகமாகி, விஜய் நீண்ட நேரம் அங்கு சிக்கி தவித்தார். எனவே, அவரது பாதுகாப்பை மத்திய உள்துறை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொளத்துாரில் பிரசாரத்துக்கு வைத்திருந்த ஒலிபெருக்கியை அகற்றி, மின் இணைப்பையும் துண்டித்தனர். இதனால், விஜய் பிரசார வாகனம் பொது மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டதால், நிலைமை மோசமடைந்தது.
குறைவான காவலர்கள் தான் பணியில் இருந்தனர். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை தலையிட்டு, விஜயின் பாதுகாப்பையும், பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்க்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை வழங்கியது. ஆனால், தன்னை உளவு பார்க்க அனுப்பியதாக கருதிய விஜய், அவர்களை முறையாக பயன்படுத்தவில்லை; தனியார் பாதுகாவலர்களையே பயன்படுத்தி வந்தார். கரூர் சம்பவத்துக்கு பின் தான், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்கத் துவங்கினார்.
