சென்னை: தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கியுள்ளது. த.மா.கா.,

சென்னை: தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கியுள்ளது. த.மா.கா., உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.

-தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு கட்டங்களாக பேச்சு நடத்தினார்.

அதன்படி, கடந்த 19ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார்.

யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்

அதன்படி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2:30 மணிக்கு பீயூஷ் கோயல் வந்தார்.

அவருடன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் வந்தனர்.

தொடர்ந்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் வந்தனர்.

இதையடுத்து, யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பழனிசாமி அறிவித்தார்.


எந்த கட்சிக்கு எந்த தொகுதி

பழனிசாமி அளித்த பேட்டி:

எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக நடந்தது. அதன்படி, பா.ஜ.,வுக்கு 27 தொகுதி களும், பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. இரவுக்குள் பேச்சு முடிந்து, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களும், எங்கள் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்கின்றனர்.

தே.ஜ., கூட்டணி உணர்வுப்பூர்வமான வெற்றி கூட்டணி. வரும் தேர்தலில், 210 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெறும்; அதிக இடங்களில் வென்று, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்.

எங்களுடைய கருத்து பரிமாற்றத்துக்காக டில்லி செல்கிறோம். நாங்கள் டில்லிக்கு சென்றால், ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது; அவதுாறு பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இன்று நாங்கள் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி உள்ளோம். காலையில் தான் பீயூஷ் கோயல் வந்தார். அவருடன் பேச்சு நடத்தி, மதியம் அறிவித்துள்ளோம்.

எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிப்போம். ஆனால், 20 நாட்களாக தி.மு.க., கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.

மக்கள் விரோத தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம். தினகரன் இன்று அ.தி.மு.க., அலுவலகம் வந்துள்ளார்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.

எமர்ஜென்சி, மிசா கொண்டு வந்த காங்கிரசோடு தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அது தான் பொருந்தாத கூட்டணி. நாங்கள் தொகுதி பங்கீட்டை அறிவித்து விட்டோம். ஆனால், தி.மு.க.,வால் முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது தொகுதி பங்கீட்டில் 56 தொகுதிகள் போக, அ.தி.மு.க., கையில் 178 தொகுதிகள் உள்ளன. இவற்றில், வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஜெகன் மூர்த்தி, ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து, பழனிசாமி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.

பால்கனியில் கை அசைத்த கோயல் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வந்த பின், ஜெயலலிதா போல பால்கனியில் நின்று, கைகளை அசைத்து விட்டு உள்ளே சென்றார். அதேபோல், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நேற்று தினகரன் அ.தி.மு.க, அலுவலகத்துக்கு வந்தார். அவரும் பால்கனியின் நின்றபடி, கீழே நின்ற கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு வணக்கம் வைத்தார்.

பாரிவேந்தர் ஏமாற்றம் வாசன் வரவில்லை தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, ஜான் பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோர் அ.தி.மு.க., அலுவலகம் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கான தொகுதி விபரங்களை பழனிசாமி வெளியிடவில்லை. இதனால், இருவரும் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு, த.மா.கா., தலைவர் வாசனுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கேட்கும் ஆறு தொகுதிகளை கொடுக்க, பழனிசாமி சம்மதம் சொல்லவில்லை. இதனால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு வாசன் வரவில்லை.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது: அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதம், நான் கேட்ட தொகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளன. என்னென்ன தொகுதிகள் என்பதை பழனிசாமி சொல்வதே சரியாக இருக்கும். எனக்கு ஆதரவாக நின்ற முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 11 தொகுதிகளிலும் ‘குக்கர்’ சின்னத்திலேயே போட்டியிடுவோம். தமிழகத்தில் மற்ற கட்சிகளின் கூட்டணியால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தாமரை சின்னத்தில் போட்டியிட பீயூஷ் கோயல் வேண்டுகோள் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல் நேற்று காலை சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பீயூஷ் கோயலை, வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். அவர்களிடம், ‘உங்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்’ என பீயூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். பின், வாசன் கூறுகையில், ”த.மா.கா., விருப்பத்திற்கு ஏற்ப, தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பீயூஷ் கோயலிடம் பேசியுள்ளேன்,” என்றார் . ஏ.சி.சண்முகம் கூறுகையில், ”மூன்று இடங்களாவது வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்; ஆலோசித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட, புதிய நீதி கட்சி தயாராக உள்ளது,” என்றார். பாரிவேந்தர் கூறும்போது, ”நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க சம்மதித்தனர். எங்களின் சின்னம் மைக்; அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்,” என்றார்.

200 தொகுதிகளில் வெற்றி பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: தி.மு.க.,வின் பேச்சை, மக்கள் இனி நம்ப மாட்டார்கள். எனவே, தே.ஜ., கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தொகுதி பங்கீடு எங்களுக்கு நிறைவாக இருந்தது. மக்களை சந்திக்க பயப்படும் முதல்வர் ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சியினரும், ‘டில்லி டில்லி’ என கத்துகின்றனர். சாதனைகளை சொல்லி தேர்தலை சந்திக்க தைரியமில்லாத தி.மு.க., 28 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link