சென்னை: த.வெ.க., சார்பில் போட்டியிட முதற்கட்டமாக தேர்வான 60 வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை

சென்னை: த.வெ.க., சார்பில் போட்டியிட முதற்கட்டமாக தேர்வான 60 வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தலுக்காக த.வெ.க., சார்பில் போட்டியிட, பிப்ரவரி மாதம் விருப்ப மனு வழங்கப்பட்டது. ஆனால், எவ்வளவு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு அளிக்கப்பட்டன என்ற தகவலை, அக்கட்சி இன்னும் வெளியிடவில்லை.

இந்நிலையில், முதற்கட்டமாக சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட, தேர்வு செய்யப்பட்ட 60 வேட்பாளர்களுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின், விஜய் பேசியதாவது: இனி எனக்கு எல்லாமே அரசியல் தான். குடும்பம், நட்பு என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தான் முழு நேரமாக அரசியலில் இறங்கி உள்ளேன்.

தேர்தல் எனும் போரில், த.வெ.க.,வின் முன்கள வீரர்கள் நீங்கள்தான். பல்வேறு தகுதி அடிப்படையில், நீங்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள்.

உங்களின் இடத்துக்கு எவ்வளவு போட்டி இருந்தது என, உங்களுக்கே நன்றாக தெரியும். உங்கள் மீதான நம்பிக்கையில்தான், வேட்பாளராக தேர்வு செய்துள்ளேன். உங்களின் செயல்பாடுதான், த.வெ.க.,வை வெற்றி பெறச் செய்யும்.

த.வெ.க.,வின் தேர்தல் அறிக்கை எல்லா தரப்பிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அதை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதேபோல, ஆலோசனை கூட்டங்கள் முடிக்கப்பட்டு, வரும் 18ல் வேட்பாளர் பட்டியலை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார்.

வேட்பாளர்களுக்கு ‘பென்டிரைவ்’

ஆலோசனை கூட்டம் முடிந்த பின், வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்து, விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, தொகுதி பூத் கமிட்டி அமைப்பு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய புத்தகமும், ‘பென்டிரைவ்’ சாதனமும், அவர்களுக்கு வழங்கப்பட்டன.

‘கடைசி வரை பார்க்க முடியல’

த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘கட்சி துவங்கிய நாளில் இருந்து, மாவட்டச் செயலர்கள் மட்டும்தான் விஜயை சந்தித்துள்ளனர். பிற கட்சிகளில், விருப்ப மனு வழங்கியவர்களுடன், தலைமை நேர்காணல் நடத்தி, அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரிப்பர். அதேபோலவே இங்கும் நடக்கும் என்ற நம்பிக்கையில், ‘சீட்’ கிடைக்காது என தெரிந்தும், தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேசும் ஆர்வத்தில், பலர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தோம். ஆனால், கடைசிவரை விஜயை சந்திக்கவே முடியவில்லை. விருப்ப மனுவோடு கட்டிய பணம் போனதுதான் மிச்சம்’ என்றனர்.

Source link