சென்னை : த.வெ.க., தலைவர் விஜய், தான் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின், மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை பெரம்பூரிலும், அதை தொடர்ந்து கொளத்துார், வில்லிவாக்கத்திலும் இரவு 7:00 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டது.
இருப்பினும், பெரம்பூர் தொகுதியில் முன்கூட்டியே மதியம் 1:30 மணிக்கு விஜய் பிரசாரம் செய்தார். அதேபோல், கொளத்துார் தொகுதியிலும் மாலை 4:30 மணிக்கு பிரசாரம் நடந்தது. கொளத் துாரில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், திட்டமிட்டபடி விஜயால் பேச முடியவில்லை.
மேலும், ‘வில்லிவாக்கத்தில் காவல் துறை சார்பாக முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை’ எனக் கூறி, வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்யாமல் விஜய் வீடு திரும்பினார்.
இது குறித்து, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை பெரம்பூரில் விஜயின் பிரசாரப் பயணத்தில், செல்லும் இடங்களில் எல்லாம் தன்னிச்சையாக மக்கள் திரண்டனர்.
‘ஆனால், சரியான பாதுகாப்பு, போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சென்னை பெருநகர காவல் துறை செய் யவில்லை.
‘எனவே, விஜய் மற்றும் மக்கள் பாதுகாப்பு கருதி, வில்லிவாக்கம் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டது’ என, கூறப்பட்டு உள்ளது.
