சென்னை : த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, டி.ஜி.பி., மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தன் வேட்புமனுவை, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
பிரசாரம் ரத்து
தன் பிரசார வாகனத்தில் அவர் ஊர்வலமாக சென்று, பெரம்பூர் தொகுதி மட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்துார் தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.
இதைதொடர்ந்து, வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். பெரம்பூர் அகரம் சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை போலீசார் மேற்கொள்ளவில்லை.
இதனால், விஜயால் திட்டமிட்டபடி பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. வில்லிவாக்கம் தொகுதி பிரசாரத்தையும் ரத்து செய்தார்.
போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளததால், விஜய் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கருதி, வில்லிவாக்கம் தெருமுனை பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்தார்.
இதைதொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், த.வெ.க., தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விஜய் செல்லும் வழியில், போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்தல் கொஞ்சம் கூட இல்லை. விஜய் பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சென்னை மாநகர காவல் துறையின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளின் மீது, தேர்தல் கமிஷன் உடனடியாக தலையிட்டு, முறைப்படுத்த வேண்டும்.
செயல்படாத அதிகாரிகள் மீது, துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விஜய்க்கு அனுமதி மறுத்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் திறந்த வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது, ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகார் ஏற்பு
இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், விஜய் பிரசாரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி, பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.
அதேபோல், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘தலைவர்களின் பிரசாரத்தின்போது, உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தலைவர்களுக்கும் சமமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டுள்ளது.
