சென்னை: த.வெ.க.,வில் இணைவதற்கு, மாவட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த காரணத்தால், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் டி.செல்வம், கட்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என, டி.செல்வம் தலைமையில், மாநில நிர்வாகிகள் சிலர், திரைமறைவில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், கட்சித் தலைமை தி.மு.க.,வுடனான கூட்டணி தொடரும் என அறிவித்துவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த செல்வம், தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் த.வெ.க.,வில் சேர விரும்பினார். இதற்கான அறிவிப்பை ரகசியமாக வெளியிட்டார்.
இதையடுத்து, அவரோடு சேர்ந்து கட்சியின் சில நிர்வாகிகளும் தொண்டர்களும் விரைவில், த.வெ.க.,வில் விஜய் முன்னிலையில் இணைய திட்டமிட்டிருந்தனர். இது தெரிய வந்ததும், டி.செல்வத்தை, ‘சஸ்பெண்ட்’ செய்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.
