சென்னை: ''நகரங்கள் மற்றும் கிராமங்களில், 2030ம் ஆண்டுக்குள், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 7 லட்சம்

சென்னை: ”நகரங்கள் மற்றும் கிராமங்களில், 2030ம் ஆண்டுக்குள், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழக அரசு சார்பில், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் நிறைவு விழா, ‘தமிழ்நாடு – 2030 கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான, 14 துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக அரசின் வரலாற்றில் மார்ச் 6ம் தேதி மிக முக்கியமான நாளாக அமையும்.

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், 1.80 லட்சம் குடும்பங்களிடம் அவர்களது கனவுகள் குறித்து கேட்டறியப்பட்டு உள்ளது. அவற்றில், முக்கியமானவற்றை முன்னிலைப்படுத்தி, 14 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

சிறப்பு முகாம்கள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2030ம் ஆண்டுக்குள், கிராமங்களில் 5 லட்சம்; நகரங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.

தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பு, 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும். மேலும், 43 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டையும், 1.25 லட்சம் பேருக்கு விவசாய உபகரணங்களும் வழங்கப்படும்.

கல்வித் துறையில், ‘இடைநிற்றல் இல்லா கல்வி கனவு 2030’ திட்டத்தில், மாணவர்கள் வெற்றியுடன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வது உறுதி செய்யப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் கட்டப்படும்.

மாநிலம் முழுதும், 300 நுாலகங்கள் ‘லைப்ரரி 5.0’ முறையில் நவீனமயமாக்கப்படும். மேலும், ‘வெற்றி பள்ளிகள்’ திட்டத்தில், 1,000 மாடல் பள்ளிகள் திறக்கப்படும்.

வரும் 2030ம் ஆண்டுக்குள், உயர் கல்வி சேர்க்கை விகிதம் 90 சதவீதத்தை எட்டும் வகையில் கல்வி நிறுவன கட்டமைப்புகள் விரிவாக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், செயற்கை நுண்ணறிவு திறனுக்கான ஏ.ஐ., ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

ஜவுளி, தோல், ஆடை, கம்ப்யூட்டர் துறைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

Image 1545293

வீட்டுமனை இல்லாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு, 2030ம் ஆண்டுக்குள் பட்டா வழங்கப்படும்.

கிராமங்கள் மற்றும் நகரங்கள் நிலையான வளர்ச்சி அடைய, உன்னத திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு, ‘உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள்’ என பெயர் சூட்டப்படும். முதற்கட்டமாக, 10 ஊராட்சிகளில் இந்த திட்டம் உடனடியாக துவக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் ‘மேக் இன் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் நவீன தொழில் பூங்கா, சிறப்பு தொழில் தொகுப்பு, பொது வசதி மையம் அமைக்கப்படும். தமிழ் மொழிக்கென ‘மொழி மாதிரி’ உருவாக்கப்படும்.

கண்காட்சி

கால்நடைகள் எண்ணிக்கை, 2030க்குள் மூன்று கோடியாக அதிகரிக்கப்பட்டு, பால் உற்பத்தியை 4.50 கோடி லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரங்களில் 20 சதவீதத்தை 2030ம் ஆண்டுக்குள் பசுமை பகுதிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாசார மையங்கள் அமைக்கப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில், மூன்றாம் இடத்தில் உள்ள தமிழகம், முதலிடம் அடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுதோறும் பன்னாட்டு தொழில் கண்காட்சி நடத்தப்படும்.

சர்வதேச சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதத்தில், கடலோர சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படும். நெசவாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த, நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து தரப்படும். மேலும், நெசவு செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, அனைத்து துறைகளையும் மேம்படுத்த, எனக்கு பல கனவுகள் உள்ளன. எனவே, தி.மு.க., தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். கனவுகளை நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் தி.மு.க., ஆட்சி

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி, அண்ணாதுரை தலைமையில் தி.மு.க., முதன் முறையாக ஆட்சி அமைத்தது. அன்று தான் தமிழினம் தலை நிமிர்ந்த நாள். தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை அறிவித்துள்ளேன். தி.மு.க., ஆட்சி இந்த மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, அடுத்தும் தி.மு.க., ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link