சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக, வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தும், இதுவரை நிறைவேற்றாதது ஏன்?’ என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024– – 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாக, கடந்தாண்டு அக்., 27ல் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி, அ.தி.மு.க., – எம்.பி., இன்பதுரை உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை உடனே வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த மாதம் பிப்., 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வழக்குப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., – எம்.பி., இன்பதுரை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உடனே வழக்குப்பதிவு செய்யும்படி, கடந்த மாதம் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும், அதை ஏன் நிறைவேற்றவில்லை’ என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ”ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி, வழக்குப் பதிவு செய்ய, அரசின் ஒப்புதலை பெற வேண்டும்,” என்றார்.
அப்போது, ‘உயர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்ட பின்னும், அரசிடம் அனுமதி பெற வேண்டுமா; முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய தயாராக இல்லை என்றால், இந்த உத்தரவுக்கு எதிராக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ”லஞ்ச ஒழிப்புத் துறை உடனே வழக்கு பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் எண்ணிடப்படும்,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்., 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
