சென்னை: நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு திமுக எம்பி கனிமொழி, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜ்யசபா எம்பியான சி.வி.சண்முகம் பேசியதாவது: எப்படி எல்லாம் அரசு ஏமாற்றுகிறது.தினமும் வசனம், கவிதை. அப்துல் கலாம் கனவு காண வேண்டும் எனசொன்னார்.ஸ்டாலின் ஒரு படி மேலே போய், உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என சொல்கிறார் . இவ்வாறு சண்முகம் பேசினார்.
தொடர்ந்து, சண்முகம் பேசும்போது, ஆமாம் எனக்கு (ஒரு நடிகையின் பெயரை குறிப்பிட்டு) வேண்டும். கனவை நிறைவேற்றுவாரா. இவன் அந்த நடிகையை கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் நிறைவேறறுவாரா?ஆட்சி முடியும் போது கனவை சொல்லுங்கள் என கேட்கிறார். ஐந்து வருடம் என்ன செய்கிறார் என தெரியவில்லை. நடக்கிறார். ரன்னிங் போகிறார். சைக்கிள், கார், ஓட்டுகிறார். இன்னும் ராக்கெட் தான் ஓட்டவில்லை என்றார்.இவ்வாறு அவர் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட அறிக்கையில்,’அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்’ எனத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சினிமாநடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்? நடிகைகளை அநாகரிகமாக பேச வேண்டும் என்று தான் உங்கள் கொள்கை சொல்கிறதா எனக்கூறியுள்ளது.
பாஜ நிர்வாகி குஷ்பு: பொது வாழ்க்கையில் இருக்கும் நடிகைகள் பொதுச்சொத்து அல்ல. ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது என்பது பேசுபவரின் மனப்பான்மை வளர்ப்பை காட்டுகிறது. மரியாதை ஒரு வழிப்பாதையல்ல. நீங்கள் மற்றவர்களை மதித்தால் தான் உங்களுக்கு மரியாதை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
