சென்னை: நாகை அருகே, சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சென்றதாக, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., கூட்டணியில், நாகை தொகுதியில் போட்டியிடும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை, சிக்கல் சிங்காரவேலர்கோவிலுக்கு, தி.மு.க.,வினர் அழைத்து சென்றுள்ளனர். ‘இறைவன் ஒருவனே’ என்ற முஸ்லிம் மதத்தை ஏற்ற, ஜவாஹிருல்லா பார்வையில், சிக்கல் சிங்காரவேலர் என்பது காபிர்கள் வழிபடக்கூடியது.
தான் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு உண்மையாக இல்லாமல், ஓட்டு நாடக அரசியலுக்கு, ஹிந்துக்கள் நம்பிக்கையோடு வணங்கும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், ‘போட்டோ சூட்’ நடத்தியது கண்டனத்துக்குரியது. ஹிந்து அல்லாதவர்கள், கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்ற நடைமுறையை, அவர் மீறியுள்ளார்.
மாற்று மதத்தினர் சென்றால், அந்த கோவிலில் உள்ள கடவுள் மீது நம்பிக்கை உள்ளது என, அங்குள்ள பதிவேட்டில் எழுதி, கையெழுத்திட வேண்டும். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், ஜவாஹிருல்லா இதை பின்பற்றினாரா. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், ஜவாஹிருல்லாவை அனுமதித்த, கோவில் செயல் அலுவலர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
