சென்னை: ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க’ என, ‘இன்ஸ்டா’ பிரபலங் களான சிறுவர்கள் தேவா, ஜீவாவை நேரில் அழைத்து , முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
சமூக வலைதளமான, ‘இன்ஸ்டாகிராமில்’ பிரபலமாக உள்ள சிறுவர்கள் தேவா, ஜீவா ஆகியோரை, முதல்வர் ஸ்டாலின், சென்னை அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து அவர்களோடு கலந்துரையாடினார்.
இந்த உரையாடலை, முதல்வர் ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் அவர்களிடம், பள்ளியின் செயல்பாடு, காலை சிற்றுண்டி, சத்துணவு மற்றும் குடும்பம் பற்றி கேட்டறிந்தார்.
அத்துடன், இன்ஸ்டா கிராம் வீடியோக்கள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். ‘உங்களை உற்சாகப்படுத்த நேரில் அழைத்தேன். படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க’ என அறிவுறுத்தினார்.
‘நான் உங்க தேவா. நம்மோடு சி.எம்., சார் இணைந்துள்ளார். அவர் சொல்லும் அட்வைஸை எல்லாரும் கேளுங்க’ என, சிறுவன் தேவா, இன்ஸ்டா கிராம் வீடியோவில் பேசுகிறார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘உங்களின் ரீல்ஸ் வீடியோ உருவாக்கம் நன்றாக உள்ளது. எனது வாழ்த்துகள். அதற்காக படிப்பை விட்டு விடாதீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சொன்னது போல உங்கள் கனவுப் பணியான கலெக்டர், போலீஸ் அதிகாரியாகி, இங்கு வர வாழ்த்துகள்’ என கூறினார்.
