சென்னை : பயங்கரவாதிகள் சதி திட்டம் குறித்து, திருப்பூர் மாவட்டத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பினர் வகுத்து தந்த சதி திட்டத்துடன், திருப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த மிஜனுார் ரகுமான் உட்பட ஆறு பேர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தலைவனாக ஷபீர் அகமது லோன் என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். இரு நாட்களுக்கு முன், உத்தர பிரதேச மாநிலம், காஜிப்பூரில் பதுங்கி இருந்த ஷபீர் அகமது லோன், டில்லி சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், 2007ல், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த, 2019ல், சிறையில் இருந்து வெளியே வந்த பின், வங்கதேசத்திற்கு தப்பிச் சென்று விட்டார். அங்கிருந்து, சமூக வலைதளம் வாயிலாக நாசவேலைக்கு, லஷ்கர் – இ – தொய்பா அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வந்தார். இவரும், திருப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்து, சதி திட்டத்தை செயல்படுத்த காத்திருந்தார்.
இதையடுத்து, ஷபீர் அகமது லோன், எந்தெந்த பகுதிகளுக்குச் சென்றார் மற்றும் அங்கு அவர் சந்தித்த நபர்கள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இதன்படி, திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம், பல்லடம் மற்றும் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
