சென்னை: பா.ம.க., சின்னம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடும்படி, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
பா.ம.க., உட்கட்சி பிரச்னை தொடர்பான சிவில் வழக்கு முடிவுக்கு வரும் வரை, ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக, சென்னை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாட்களில் விசாரித்து முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனை நாடலாம் என, அறிவுறுத்தி இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சின்னம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் முன், ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, மாம்பழம் சின்னத்தை முடக்குவது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்’ என, ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
