சென்னை : பா.ம.க., விவகாரத்தில், டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு அன்புமணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. கட்சி யாருக்கு சொந்தம் என்பதில், முறையான ஆவணங்கள் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறிய விளக்கத்தில், நீதிபதி திருப்தி தெரிவித்துள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும், ‘நானே பா.ம.க., தலைவர்’ என அறிவித்து, தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
மாமல்லபுரத்தில், 2025 ஆகஸ்ட் 9ம் தேதி நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது.
வழக்கு
இதை எதிர்த்து, தேர்தல் கமிஷனில் புகார் அளித்த ராமதாஸ், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை, 2025 டிச., 4ல் விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா, “பா.ம.க.,வின் உள் விவகாரங்களில் தலையிட, தேர்தல் கமிஷனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வழங்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் தான் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க முடியும். பா.ம.க., விவகாரத்தில், தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கைகள் அவர்களின் அதிகார வரம்புக்குள் வராது. எனவே, பா.ம.க., உட்கட்சி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும், சிவில் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம்,” என உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி மினி புஷ்கர்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘பா.ம.க., சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே, அன்புமணியின் தலைவர் பதவிக்காலம், 2026 வரை உள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டது. ஒரு கட்சிக்குள் பிளவு அல்லது பிரச்னை ஏற்படுவதற்கு முன் உள்ள ஆவணங்களின்படி நிர்வாகிகளை அங்கீகரிக்க, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது’ என வாதிட்டார்.
தடையில்லை
தேர்தல் கமிஷனின் விளக்கங்களை பதிவு செய்த நீதிபதி மினி புஷ்கர்னா பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் கமிஷன் தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், பா.ம.க., நிர்வாகிகள் யார் என்பதை தீர்மானிக்கவோ அல்லது நிர்வாகிகளை அங்கீகரிக்கவோ எந்தத் தடையும் இல்லை. இந்த விவகாரத்தில், நாங்கள் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
சட்டத்தின் அடிப்படையில் என்ன நிலை உள்ளது என்பது குறித்து, தேர்தல் கமிஷன் மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. தற்போதைய சூழலில், பா.ம.க., கட்சி, சின்னம் யாருக்கு என்பது குறித்த கருத்துக்கள் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட நிலையில், எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலை ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அன்புமணிதான் பா.ம.க., தலைவர் என தேர்தல் கமிஷன் கூறியதை டில்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது, ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பா.ஜ., கூட்டணியில் உள்ளதால் அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என, ராமதாஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
