சென்னை: புருனே வழியாக சென்னைக்கு கடத்திய, 5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான புருனேவில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் ‘ராயல் புருனே ஏர்லைன்ஸ்’ விமானம் வந்து தரையிறங்கியது. இதில் கேரளாவைச் சேர்ந்த 27 வயது வாலிபர், வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்று சென்னைக்கு திரும்பினார்.
அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது; அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, அவரது உடைமைகளை பிரித்து சோதனை செய்தனர்.
அதில், 10 பாலிதீன் பேப்பரால் கட்டப்பட்ட பார்சலில், ஐந்து கிலோ உயர்ரக கஞ்சா இருந்தன. அதன் மதிப்பு 5 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பயணியை கைது செய்து விசாரித்தனர்.
தமிழகத்தில் கஞ்சாவுக்கு ‘டிமாண்ட்’ அதிகமாக உள்ளதால், ‘சப்ளை’ செய்ய கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பொதுவாக தாய்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படும். ஆனால், முதல் முறையாக, புருனே வழியாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச விமான நிலையங்கள், சில ஆண்டுகளாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ விமான நிலையங்களில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கின்றனர். இதையடுத்து, கடத்தல் கும்பல், புது ‘ரூட்’டை கண்டுபிடித்து, கடத்தலில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து கடத்தினால் எப்படியும் பிடிபடுவோம் என்பதால், போதை புழக்கம் இல்லாத நாடுகளில் இருந்து கடத்த துவங்கி உள்ளனர். பிடிபட்ட பயணி கடத்தலுக்காகவே பாஸ்போர்ட் எடுத்து பயணம் செய்துள்ளார். இவரிடம் தொடர்பில் இருந்த மற்றொரு கேரள நபரை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
