சென்னை: புள்ளி, கமா வைக்காததற்கு எல்லாம் தங்களின் வேட்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் புகார் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக, சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வேல்முருகன் அறிவித்தார். இதனிடையே, வேட்புமனு பரிசீலனையின் போது, தங்களது வேட்பாளர்கள் பலரின் வேட்புமனுக்கள் எந்தவித காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், தவாக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், சென்னையில் உள்ள தமிழக தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது; தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்தி, போடி, பழனி, பொள்ளாச்சி, அம்பை உள்பட 20 தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், புள்ளி, கமா வைக்கவில்லை என்பதற்காக நிராகரிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
