சென்னை: பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று புகார் அளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்த பொன்ராஜ், பேட்டி ஒன்றில் பேசியபோது, த.வெ.க.,வைச் சேர்ந்த பெண்களை, ‘விபசாரிகள்’ என, இழிவாக கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது புகார் அளிப்பதற்காக, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று இரவு, சென்னை டி.ஜி.பி., அலுவலகம் சென்றார்.
பின், தமிழக சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி,யிடம், விஜய் அளித்த புகார் மனுவில் கூறியதாவது: தி.மு.க.,வின் அதீத ஆதரவாளராக செயல்பட்டு வரும் பொன்ராஜ், தமிழகம் முழுதும் இருக்கும், என் அம்மா, அக்கா, தங்கைகளை தரம் தாழ்ந்து பேசியுள்ளார். குறிப்பாக, ஒட்டுமொத்த தமிழகப் பெண்கள் இனத்தையே, ஆபாச வார்த்தைகளைக் கூறி, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தி.மு.க., அரவணைப்பில் இருப்பதால், தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில், எல்லை கடந்து அநாகரிகமாக, அவர் பேசி வருகிறார். தமிழக மகளிரை மிக மோசமாக பேசி வரும், அந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜயுடன் வந்த, த.வெ.க., கொங்கு மண்டல அமைப்பு செயலர் செங்கோட்டையன் கூறுகையில், ”பெண்களை, மிக கீழ்த்தரமாக விமர்சித்த பொன்ராஜுக்கு, தி.மு.க., பின்புலம் உள்ளது. தரம் தாழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், மன்னிப்பும் கேட்க முடியாது எனக் கூறியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
