சென்னை: பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பு மனுவுடன் விஜய் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் வழக்கு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை விஜய் சமர்ப்பித்து உள்ளார். பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் குற்ற வழக்கு இல்லையென விஜய் தெரிவித்து இருந்தார்.
திருச்சி கிழக்கிற்கான வேட்புமனுவில் பெரம்பூர் பிரசாரத்தின் போது மார்ச் 30ம் தேதி ஒரு வழக்கும், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் சமர்ப்பித்துள்ள வேட்புமனுக்களில் இவ்வாறு மாறுப்பட்ட, முரண்பட்ட தகவல்கள் இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி கட்சியினரிடம் விசாரித்த போது, ”பழைய வழக்கு இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. பிரமாணப்பத்திரத்தில் மாறுதல் செய்வதற்கும், கூடுதலாக சேர்ப்பதற்கும் இன்னும் அவகாசம் இருக்கிறது. இது ஒரு சிக்கலே இல்லை” என்றனர்.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் வழக்கு விபரத்தை தெரிவிக்கவில்லை என்றும், அதனால் விஜய் மனு தள்ளுபடியாகும் என்றும் சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ஆனால் சட்டப்படி அவ்வாறு தள்ளுபடியாக வாய்ப்பு இல்லை என்று விபரம் அறிந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
