சென்னை: பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
அவரது அறிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான்: புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை; நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்….
1. சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா?
2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா?
3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா?
4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா?
5. மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6000 அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா?
6. பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா?7.இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா?
8. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா?
9. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா?
10. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13 % மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம் இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
